Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for ஓகஸ்ட், 2007

pc143176.jpg

Read Full Post »

ஒரு காத்திருப்பின்
இடைவேளையில் 
நட்பில் கரைந்த  
ஞாபகங்கள்!!
தனக்கு வேண்டியதை
`தா`என்று கேட்கவும்
கேட்காமலே
எடுத்துக் கொள்ளவுமான
உரிமைப் பத்திரம்!

மௌனத்தின் பாஷை
இத்தனை
தெளிவாய் இருக்குமா
உயிரில் கேட்கிறதே!!

ஒவியம் வரைகையில்
தூரிகையின்
பெருமூச்சு
புரியும் நிதானம்
புலன்களில்…

வண்ணங்களை
வாரியிறைத்து
எனக்கு மட்டுமாய்
இயற்கை
சந்தோஷிக்கிறது!
ஒரு சந்தோஷத்தின்
வேதனையை
ஒரு வேதனையின்
சந்தோஷத்தை
இதயம் உணர்கிறது!

தாய்மடி மேல்
தலை வைத்தழும்
சுதந்திரம் போல்…
உள்ளார்ந்த தோழமையில்
உயிர் சிலிர்க்கிறது!

உன்னை நானும்….
என்னை நீயுமாய்
பகிரும் பொழுதுகளில்
பசியில்லை…..
தாகமில்லை……
மனவெளியில்
மகிழ்ச்சி
ஆயிரம் மழைத் துளிகளாய்
வர்ஷிகின்றது!!!

காதலின் சுகம்
போலவே 
நட்பின் இதமும்
ஒரு புதிராய்
அதிரும் மனதின்
தலை தடவுகிறது!!!

ஒரு
நட்பின் புன்னகைக்கு
உதடுகள்
தேவையில்லை
இதயம் போதுமே!!!

Read Full Post »

அகதி

சுட்டு விரல் பட்டு
சிலிர்க்கும்…
வேலியோர மொட்டுமல்லி!

விட்டு விட்டு
பூத்தூவும்…
மேகப்பஞ்சு!
அலுக்காமல்
என்னோடு ஓடி வரும்…
ஒற்றை நிலா!

வரும் போதெல்லாம்
தலை சிலுப்பி
வரவேற்கும்
முன் வாசல் வேப்ப மரம்!
என்
கவிதை பொறுக்கி
கிறுக்குப் பிடித்த
என்னறை
ஜன்னல் கம்பி!
நான்
காதலோடு வந்தமரும்
மருதமரப் பந்தல்
பதித்த
நதிக்கரை!

……………………….
ஒன்றும் ரசிக்கவில்லை
………………………..
எல்லாமே
எனக்கு அந்நியமாய்….
எனக்கெதிராய் சதி
செய்வதாய்…..
…………………….
………………………………
என் உயிர் முளைத்து
சடைத்த
என் தேசம்
எனக்கினி  சொந்தமில்லை!!!

1998 ஜுலை 14

Read Full Post »

தூங்காத நினைவுகள்
மெல்லிய தாலாட்டாய்….

விம்மி விம்மி
வெளிவராது…
உள்ளுக்குள் அடங்கிப் போகிறது
பெருமூச்சு!!!
விழி கீறி
குபுக்கென வெளிவரப்பார்க்கும்
நீர்த்துளி
தணிக்கை செய்யப்படுகிறது!!!
ஒட்ட  வைத்த‌
சிரிப்பு…

உலர்த்திவைத்த
விழியோரங்கள்…

என்ன
வாழ்க்கை இது!
இன்னும்
ஏற‌ வேண்டிய‌
இல‌க்குக‌ள்
இத‌ய‌ம் பிராண்டும்!!!

`நான்`
என‌க்கில்லாத‌ அவ‌ல‌ம்
அவ‌சர‌மாய்
நினைவுக்கு வ‌ரும்!!!

என் நேற்றுக்க‌ள்….
என் இன்றுக‌ள்….
என் நாளைக‌ள்….
யாரிடம்
அடகு வைக்கப்பட்டிருக்கின்றன???
என்
மெளனமே…
என் செவிக‌ளுக்கு
இரைச்சலாயிருக்கிற‌து!!
இறைவா!!
எனக்கேன்
இத்த‌னை `சிற‌குக‌ள்`
த‌நதாய்
த‌ங்க‌க் கூண்டில்
அடைத்து விட்டு???

Read Full Post »

ச‌மீலா யூசுப் அலி

ஒரு
விடிவெள்ளி
உதிர்ந்து விழுகிறது!

அந்திச்சூரியன்
அமைதி கொள்கிறது!

பனியிலை மரங்கள்
தலைகுனிகின்றன!

தூங்கப்போன‌
நிலவு
துடித்தெழுகிறது!

மனப்பள்ளத்தாக்கில்
மண் சரிவு!

இன்னாலில்லஹி வஇன்னா
இலைஹி ராஜிஊன்!!!
அல்லாஹ்
உங்களை
அழைத்துக் கொண்டான்!
  
கட்டற்ற காற்று
இமைக்க மறந்ததா?

மாரடைப்பு…
ஆஸ்ப‌த்திரிக்க‌ட்டில்…
அடுக்க‌டுக்காய் மாத்திரைக‌ள்…
இத்த‌னைக்கும் ம‌த்தியில்
இன்னும் காயாத‌
புன்சிரிப்பு!

ம‌ர‌ண‌த்தால்
க‌வ‌ர‌ முடிந்த‌‌து
உங்க‌ள் ரூஹை ம‌ட்டும் தான்…

உங்க‌ள் நினைவுக‌ள்….
உங்க‌ள் க‌ன‌வுக‌ள்….
உங்கள் புன்னகை….
இன்னும் பத்திரமாய்!!!

ம‌ர‌ண‌த்தால்
க‌வ‌ர‌ முடிந்த‌‌து
உங்க‌ள் ரூஹை ம‌ட்டும் தான்…

அறுப‌துக‌ளிலும்
இருப‌துக‌ளின் திட‌ம்!!!

த‌லை ந‌ரைத்தாலும்…
ஜமாஅத் பாச‌றையின்
ந‌ரைக்காத‌
இளைஞ‌ர்!!!

எப்போதாவ‌து
சிணுங்கும் தொலைபேசியில்
எப்போதும்
சிரிக்கும்….
உங்க‌ள் குர‌ல்!

`அல்ஹஸ‌‌னாத்தில்
என்
க‌ன்னிக்க‌விதை…

அழகாய் இருக்கிறது
இன்னும் எழுதுங்க‌ள்`

உங்க‌ள்
வார்த்தைக்க‌சிவுக‌ள்…
சிலிர்க்கிற‌து ம‌னசு!!!

முஸ்அபும் பிலாலும்
போல்
`பிர‌போத‌ய`வும்
ஒரு
பிள்ளை தான்
உங்க‌ளுக்கு!
எதிர்ப்பின் க‌த்திக‌ளில்
தானே
நீங்கள்
அழுந்தி அழுந்தி
வைர‌மானீர்க‌ள்!

ஐநூறு இதய‌ங்க‌ள்
அல்லாஹ்வை சும‌க்க…
உங்கள் உள்ளம்
`அல்ஹ‌ம்துலில்லாஹ்`
சுமந்த‌‌த‌து!
சுவ‌ன‌த்தோட்ட‌த்தில்
ந‌ம் ஜ‌மாஅத்
சொந்த‌ங்களை
கேட்டதாய் சொல்லுங்கள்!

இல‌ட்சிய‌ப்பாதையில்
உங்க‌ள்
கால‌டித்த‌ட‌ங்க‌ள்….

ம‌ர‌ண‌த்தால்
க‌வ‌ர‌ முடிந்த‌‌து
உங்க‌ள் ரூஹை ம‌ட்டும் தான்…
ஈர விழிக‌ளின்
ஓரத்தில்…
உங்க‌ள் ஞாப‌க‌ங்க‌ளோடு
நாங்க‌ள்
ந‌ட‌க்கிறோம்…..

இனி
நீங்கள்    
நிம்மதியாய் தூங்குங்கள்
அமைதி பெற்ற‌
ஆத்மாவாய்…

Read Full Post »

5. நிழல்கள் நிஜமாவதில்லை, கனவுகள் நனவாவதில்லை –  உண்மையா ?
மிக அழகான கேள்வி.
என் சிந்தனைவேர்களில் தாகமாய் வந்தமர்ந்த வினா..

நிழல்கள் நிஜமாவதில்லை, கனவுகள் நனவாவதில்லை – 
இந்த கூற்றின் முரண் தான் என் நம்பிக்கை.

 நிழல்கள் தான் நிஜமாகின்றன , கனவுகள் தான் நனவாகின்றன  – இது  உண்மை!
அனுபவித்துச் சுவைத்த உண்மை .
எதை நாம் அதிகம் நினைக்கிறோமோ,எதை நாம் அதிகம் கனவு காண்கிறோமோ
அதை நாம் அடைகிறோம்………

என் இதயத்தில் இடம் பிடித்திருக்கும் ஒருவர்….
அவர் அறிமுகம் தேவையில்லை.
வசதியாயிருந்து பின் வறுமையின் அடிமட்டத்துக்கே போன ஒரு குடும்பத்தின் வாரிசு………….
அவருக்கு படிப்பில் அபாரத் திறமை……
காலில் செருப்பில்லாது,தேய்ந்த ஒரே சீருடையுடன் பள்ளிக்கு போனவர்.
மீதி நேரத்தில் கடையில் எடுபிடி வேலையிலிருந்து தெருவில் கூவி விற்பது வரை ஓடாய்த் தேய்ந்தவர்……….
வாழ்க்கை பற்றி  இரவின் தனிமையிலே யோசிப்பாராம் …….
`நானும் ஒரு நாள் வாழ்வில் உயர்வேன்.என் குடும்பம் கெளரவமாய் வாழும்`
என்ற கனவு……
இன்று அவர்
ஒரு அருமையான குடும்பம்,மிக கெளரவமான வாழ்க்கை,சமூக அங்கீகாரத்தோடு வாழ்கிறார்.
இறைவனுக்கே புகழ் அனைத்தும்
இப்படி நிறைய வாழும் உதாரணங்களைக் கண்டிருக்கிறேன்.
கேட்டிருக்கின்றேன்.
உளவியலில் மனதை மூன்றாகப் பிரிப்பார்கள்
1.வெளிமனம்
2.உள் மனம்
3.ஆழ் மனம்

இதில் நாம் வெளிமனதையும் உள்மனதையும் தான் அறிகிறோம்.
மிகவும் சக்தி மிக்க ஆழ்மனதின் ஆற்றலை குறைவாகவே தெரிந்து வைத்திருக்கிறோம்.
ஆழ்மனது ஒன்றை அழுத்தமாக விரும்பி விட்டால் அதை அடைந்தே தீரும்.

அடிக்கடி மனக்கண்களால் கனவு காண்பது ஆழ்மனதின் அடியாழத்தில் தங்குகிறது……..
எனவே நிழல்கள் நிஜமாகின்றன……

கனவு காண்பதில் நான்  கஞ்சத்தனம் காட்டுவதில்லை எப்போதுமே!!!
சின்ன வயதில் என் அறையில் மாட்டியிருந்த படத்தில் இருந்த
`keep on believing ……….Your Dreams can come true` என்ற வாசகத்தை எப்போதுமே என் இதயத்தில் பதித்து வைத்திருக்கின்றேன்……
கனவுகள் ஒரு நாள் நனவாகும்……………..
நிழல்கள் அனைத்தும் நிஜமாகும்………………
வானம் எனக்காய் இறங்கி வரும்………………
நிலவும் பனித்துளி பரிசு தரும்……………………..

Read Full Post »

4. உங்களுக்கு யாரைப் பார்த்தால் கோபம் வரும் ? கோபப்பட்ட சில
அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுங்களேன்.

கோபம் -காயப்பட்ட உள்ளத்தின் கொந்தளிப்பு……

சீண்டப்பட்ட பாம்பின் உஷ்ணக்காற்று……..

கோபம் வரக்கூடாத இடங்களுண்டு……………..

கோபம் வந்தாக வேண்டிய இடங்களுமுண்டு…………..

வரக்கூடாத இடங்களில் வந்தும் வரவேண்டிய இடங்களில் வராமலும்    இந்த கோபம் என்ன பாடு படுத்துகிறது.

எனக்கும் சின்ன சின்ன கோபங்கள் வருவதுண்டு.

அன்பானவர்களின் புறக்கணிப்பு கோபம் கலந்த அழுகையை கொண்டு வந்து நிறுத்தி விடும்……

உலகமே எதிராய் நின்றாலும் கலங்காத உறுதியுண்டு.

இனியவர்களின்  ஒரே அலட்சியப் பார்வை போதும் உயிரை வலிக்கச் செய்ய………….

எனக்கு வலிமை குறைந்தவர்களை வலியவர்கள் காலில் போட்டுமிதிப்பது

கண்டால்  கோபம் எல்லை மீறும்.

எங்களூரில் இருக்கும் ஒரு மனநலம் பாதிக்கப்பட்டவரை இளைஞர்கள் கேலி செய்து சிரிப்பதைக் கண்டு இரத்தம் கொதித்திருக்கிறேன்.

படித்தவர்கள்(?)  தங்களை விட தகுதிகள் குறைந்தவர்களை ,மட்டம் தட்டிப் பேசுவதை  அல்லது அவமதிப்பதை கண்டால் என்னுள் சினம் பிறக்கும். 

கோபத்தில் இரண்டு வகையிருக்கிறது.

நீர்————————-மணல்

நீர் சூடாக நேரம் எடுக்கும்……………

ஆனால் சூடாகி விட்டால் இலேசில் ஆறாது.

மணல் அவசரமாய் சூடாகி விடும்………

அதே அவசரமாய் ஆறியும் விடும்………

`நான் நீரா ?     மணலா  ?தெரியவில்லை.`

🙂

ஆனால் ஒன்று

அநேகமாய் என் கோபம் கண்ணீரில் தான்  கடைசியாய் வந்து தணியும்.

Read Full Post »

Older Posts »